நெருங்கும் தேர்தல்... திருப்பதி கோயிலுக்கு திடீரென சென்று ஏழுமலையானை தரிசித்த எடப்பாடி.? காரணம் என்ன.?
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் அறிக்கை என தேர்தல் பணி சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.
தீவிரமாகும் தேர்தல் பணி- திருப்பதிக்கு சென்ற இபிஎஸ்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக மற்றும் திமுக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதிமுக சார்பாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டு குழு, பிரச்சார குழு, தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் என அதிமுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் அப்பகுதி மக்களிடமும் கருத்துகளை கேட்கும் வகையில் தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். திருமலை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை .
எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
அந்தவகையில் அரசியல் தலைவர்கள் முதல் நடிகர், நடிகைகளுக்கு பிடித்த இடமாக திருப்பதி கோயில் உள்ளது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட அவருக்கு வழி நெடுக அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் கூடியிருந்த அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் வரும் பொழுது தங்களது வரவேற்பை வெளிக்காட்டும் வகையில் மேள தாள முழங்க மலர் தூவி வரவேற்றனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு திருப்பதி கோயிலில் வராஹ சாமி கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசித்தார். இரவு அங்குள்ள விடுதியில் ஓய்வு எடுத்தார். இன்று அதிகாலை வேளையில் கோயிலில் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்றார்.
ஏழுமலையானை வழிபட்ட எடப்பாடி
இன்று காலை கோவிலுக்கு சென்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனம் செய்த பின்னர் பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, தொகுதி பங்கீடு, உடல் நலம் தொடர்பாக வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்