அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷா; மவுன விரதம் கடைபிடிக்கும் எடப்பாடி; அப்போ அதுதானா?

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சையாக பேசிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Edappadi Palaniswami has not yet commented on Amit Shah's controversial remarks about Ambedkar ray

அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷா

சட்டமேதை என அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கர் இந்தியாவின் சமூகநீதி காவலராக போற்றப்படுகிறார். நமது நாட்டில் அனைவரும் சமம் என்று சட்டம் இயற்றிய அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சையாக பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின்போது பேசிய அமித்ஷா, "தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்'' என்று கூறியிருந்தார்.

அமித்ஷாவும், பாஜகவும் அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்தி விட்டதாகவும், நாட்டு மக்களிடம் அமித்ஷா பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வேண்டும் எனவும் காங்கிரஸ், திமுக உள்பட நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பொங்கியெழுந்துள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அண்ணலை அவமானப்படுத்திய அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி அமித்ஷாவுக்கு எதிராக திமுக போராட்டமும் நடத்த உள்ளது.

இதுதவிர தவெக தலைவர் விஜய்யும், ''எங்கள் கொள்கை தலைவர் அம்பேத்கரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள், விசிகவின் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் சீமான், மநீமவின் கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மவுனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருந்தாலும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மவுனம் சாதிப்பது ஏன்? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

Edappadi Palaniswami has not yet commented on Amit Shah's controversial remarks about Ambedkar ray

தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சமுகநீதி என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தியே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இப்படி இருக்கும்போது, அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷாவுக்கு குறைந்தபட்ச கண்டனத்தையாவது எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதிமுக‍-பாஜக கூட்டணியா? 

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த அதிமுக, இனி எந்த காலத்திலும் அந்த கட்சியுடன் கூட்டணியில்லை என்று அடிக்கடி கூறி வருகிறது. ஆனால் பாஜக மீது அந்த கட்சி கடுமையான விமர்சனத்தை முன்வைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அண்மையில் நடந்த அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் கண்டனத்தை பதிவு செய்த அதிமுக, பாஜக மீது ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை.

கண்டனத்துக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசுக்கு வலியுறுத்தல், மத்திய அரசின் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்ககூடாது என வலியுறுத்தல்,  மேலூரில் டங்ஸ்டன் ஆலை அமைவதை கைவிடுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தல் என மென்மையான போக்கையே அதிமுக கடைபிடித்து இருந்தது. 

இப்போதும் அம்பேத்கர் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை அதிமுக பதிவு செய்யவில்லை. இதனால் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறதா? அதனால் தான் பாஜக மீது கடும் விமர்சனத்தை வைக்க தயங்குகிறதா? இல்லை பாஜகவை விமர்சிக்காததற்கு வேறு ஏதும் காரணமா? என பல்வேறு தரப்பினர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios