Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிசாமி ஒரு பொய் மூட்டை: டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!

திமுக அரசுக்கு எதிராக பொய் மூட்டைகளை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்து விடுவதாக டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்

Edappadi palanisamy is la liar alleges dmk tks ilangovan smp
Author
First Published Oct 25, 2023, 7:23 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலினை  குறை கூறினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து எடப்பாடி பழனிசாமி கொட்டியிருக்கிறார் என திமுக செய்தித் தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஏறத்தாழ மூன்றாண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களைப் பற்றி கவலைபடாமல், தன்னையும், தனது அடிபொடிகளையும் வளமாக்கிக் கொண்ட எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி ஒரு மூட்டை பொய்களை தனது அறிக்கை மூலம் அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சி.ஏ.ஏ. சட்டம் என்று மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்தும் - சிறுபான்மை இன மக்களை அங்கீகரிக்க மறுத்தும் சட்டங்களை நிறைவேற்றியபோது, பா.ஜ.க. அரசை ஆதரித்து, சாமரம் வீசிக் கொண்டிருந்த எடுபிடி பழனிச்சாமி, கழகத் தலைவர் தளபதியை குறைகூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தி.மு.க. ஆட்சிக் காலங்களில், தமிழக வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நிறைவேற்றியுள்ள திட்டங்களை எல்லாம் மறைத்துவிட்டு, தான் செய்ததாக கூறிவரும் எடப்பாடியை மக்கள் ஏற்கனவே ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல், மு.க.ஸ்டாலினை  குறை கூறினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டியிருக்கிறார்.

பத்து ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி மேலாண்மையைச் சரியாக கையாளாமல் 5.7 லட்சம் கோடி ரூபாய் கடனில் நிறுத்திச் சென்ற எடப்பாடி அரசின் குறைகளை, சரி செய்வதையே தற்போதைய சவாலாக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருப்பது நகைச்சுவையாக உள்ளது.

தி.மு.கழகத்தின் 2021 தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறியுள்ள எடப்பாடி அவர்கள், கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தை சென்று பார்த்தால் புரியும், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2011ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, தன்னுடைய பெயரை பொறித்துக் கொண்டது யார் என்பது தெரியும்.

ஆளுநர் மாளிகையில் எதற்காக குண்டு வீச்சு: கருக்கா வினோத் சொன்னது என்ன?

எடப்பாடி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைப் பற்றித் தெளிவாக, அவரே தெரிவித்து விட்டார். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "நான் புராணங்களைப் படித்ததில்லை. அறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்" என்று, தான் அறிஞர் இல்லை என்று தன்னைப் பற்றி தானே தெளிவாக விளக்கியிருப்பதோடு, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என்று நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார். அத்துடன், ஆங்கிலயே ஆட்சிக்கு எதிராக நடந்த போர், புராணக் கதைகளில் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அவருடைய பேட்டியையும் - அவருடைய அறிக்கையையும் படித்துப் பார்த்தால், அவர் யார் என்பதையும், அவர் முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவிழ்த்துக் கொட்டிய பொய் மூட்டையை பற்றியும் தெரிந்து கொள்வார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios