ஆளுநர் மாளிகையில் எதற்காக குண்டு வீச்சு: கருக்கா வினோத் சொன்னது என்ன?
ஆளுநர் மாளிகை முன்பு எதற்காக குண்டு வீசினேன் என்பது குறித்து கருக்கா வினோத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை தமிழகம் வரும் நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாஜகவினர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், கருக்கா வினோத்திடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஓராண்டாக சிறையில் இருந்த தன்னை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், ஆத்திரத்தில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த கருக்கா வினோத். அந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, சிறையில் இருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தற்போது ஆளுநர் மாளிகை மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீசி கைதாகியுள்ளார்.
பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்து!
இதற்கு முன்பும் பல இடங்களில் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை சவுத்போக் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசினார். அந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி அந்த சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு கருக்கா வினோத் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், தேனாம்பேட்டை காவல் நிலையம் முன்பும் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். ரவுடி ஒருவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, போலீசாரை மிரட்ட அந்த ரவுடியிடம் பணம் வாங்கிக் கொண்டு, காவல் நிலையம் முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், கஞ்சா, சரக்கு வாங்க காசு கொடுத்து பெட்ரோல் குண்டு வீசச் சொன்னால் எந்த இடத்திலும் அவர் வீசுவார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.