Asianet News TamilAsianet News Tamil

சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி!

சிஏஏ சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Edappadi palanisamy has said that the AIADMK will never allow minorities to be affected by CAA act smp
Author
First Published Jan 31, 2024, 7:10 PM IST | Last Updated Jan 31, 2024, 7:10 PM IST

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.

இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, “சிஏஏ சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். அதற்கு நான் உத்தரவாதம்” என்றார்.

மத்திய இணை அமைச்சரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டினுள் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம் எனவும், தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். தன்னுடைய உயிர் இருக்கும் வரை சிஏஏ-வை அனுமதிக்க மாட்டேன் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை; காங். மட்டும் தான் பேசியுள்ளது - துரைமுருகன்

இந்த நிலையில், சிஏஏ சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.

 

 

கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை. சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி அப்போதைய எதிர்க்கட்சிகளான திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அச்சட்டத்துக்கு ஆதாரவு தெரிவித்து வந்த அப்போதைய அதிமுக அரசு, அது தொடர்பான விவாதத்தை தவிர்த்து வந்ததுடன், தமிழக சிறுபான்மையினர்களுக்கு அந்த சட்டத்தால் ஆபத்து இல்லை எனவும் விளக்கம் அளித்தது.

மத்திய பட்ஜெட்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

இந்த சட்டத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என அப்போது பேரவையில் முழங்கிய முதல்வர் பழனிசாமி, தமிழ் மண்ணில் பிறந்த யாருக்காவது இதனால் ஏதாவது பாதிப்பு இருந்தால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என எதிர்க்கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பினார். ஆனால், இன்றைக்கு சிஏஏ சட்டத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது நகை முரணாக இருக்கிறது என திமுகவினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அதேபோல், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியபோது, மாநிலங்களவையில் அப்போது அதிமுக ஆதரவு தெரிவித்தது. மாநிலங்களவையில் அப்போதிருந்த அதிமுகவின் 11 எம்.பி.களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தபோது, அதிமுகவின் எம்.பி.கள் ஆதரவு தெரிவித்து அளித்த வாக்குகள் சர்ச்சைக்குரிய அந்த மசோதா சட்டமாக வழி வகை செய்ததாக கடுமையான விமர்சனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios