முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அடாவடி செய்வதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அடாவடி செய்வதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது. சில இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர். இதை அடுத்து வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் வேலூர் மாநகராட்சியின் மேயராக சுஜாதாவும் துணை மேயராக சுனில் குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல் ஓரளவு சுமுகமாக முடிந்தது. பெரும்பான்மையான இடங்களில் திமுக வென்றுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் உக்ரைன் ரஷ்ய இடையேயான போர் குறித்து பேசிய அவர், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசின் குழு ஒன்று டெல்லி சென்றுள்ளது. மத்திய அரசு தமிழக குழுவுக்கு அனுமதியளித்தால் தமிழக மாணவர்களை வேறு நாடுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுப்போம் இல்லையென்றால் டெல்லியில் இருந்து தமிழக மாணவர்களை அழைத்து வருவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அடாவடி செய்கிறது. கேரள அரசிடம் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு உதவும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.