duplicate doctor arrested who used government doctor name

தேனி

தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரின் பெயரை பயன்படுத்தி மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணையகத்திற்கு தகவல் ஒன்று கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ் அங்கு சோதனை மேற்கொண்டார். அந்த போலி மருத்துவமனையை நடத்திவந்த வயல்பட்டியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ராஜேஷ் (34) என்பவர் சோதனை குறித்து தகவலறிந்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாராம்.

இந்த நிலையில், கொடுவிலார்பட்டியில் உரிய மருத்துவக் கல்வித் தகுதி இல்லாமல் அலோபதி மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ராஜேஷ் மற்றும் அவருக்கு உதவியாக மருத்துவச் சிகிச்சையில் ஈடுபட்ட வீரபாண்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் ரூபாதேவி ஆகியோர் மீது, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரை மாவட்ட மருத்துவப் பணிகள் நல இணை இயக்குநர் செல்வராஜ் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ராஜேஷ், ரூபாதேவி ஆகியோர் மீது காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.