சென்னையின் இந்த முக்கிய சாலையில் 2 வருடத்திற்கு போக முடியாது..! மெட்ரோ பணிக்காக ரூட்டை மாற்றி விட்ட காவல் துறை
மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதன் காரணமாக சென்னை நந்தனம் பகுதியில் 2 வருடங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய வழித்தடத்தை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது
மெட்ரோ ரயில் பணி
சென்னையில் பல்வேறு இரண்டு கட்ட மெட்ரோ ரயில் பணி முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 3 ஆம் கட்ட பணியானது நடைபெறுகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், தியாகராயநகர் போன்ற பகுதிகளை இணைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தற்போது நந்தனம் பகுதியில் போக்குவரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் CMRL ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 01/02/2023 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் நன்குச் செயல்பட்டதால் CMRL கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
நந்தனம் பகுதியில் போக்கவரத்து மாற்றம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் டி.டி.கே. சாலையை நோக்கி வழக்கம் போல் செல்லலாம். டி.டி.கே. சாலை சந்திப்பிலிருந்து ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இலகுரக மோட்டார் வாகனஙகள் மற்றும் பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து கோட்டூர்புரம் பாலத்தை நோக்கி செல்ல அடையார் கிளப் கேட் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி ஏ.பி.எம். அவென்யூ மற்றும் டர்ன் புள்ள் சாலை விரிவாக்கம் வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
மாற்று வழி அறிவித்த போக்குவரத்து காவல்துறை
இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பு வழியாக அண்ணாசாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் டிடிகே.சாலை வழியாக வலதுபுறம் திரும்பி ஸ்ரீராம் நகர் தெற்கு தெரு, ஸ்ரீ ராம் நகர் மேற்கு தெரு, செனோடாப் 2 வது லேன் மற்றும் ஜ.கே. மூப்பனார் மேம்பால சர்வீஸ் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.அடையாறு போட் கிளப் கேட் சாலை, முதல் அவென்யூ போட் கிளப் சாலை மற்றும் போட் கிளப் சாலை ஆகியவை ஒரு வழி பாதையாக மாறறப்பட்டுள்ளது. சேமியர்ஸ் சாலையில் இருந்து போட் கிளப் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் அடையாறு போட் கிளப் கேட் சாலை வழியாக செல்லலாம் (அம்மா நான்னா).
பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
ABM அவென்யூ மற்றும் டர்ன் புல்ஸ் விரிவாக்கம் ஆகியவை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாகனங்கள் அடையார் கேட் கிளப் சாலையிலிருந்து கோட்டூர்புரம் மேமபாலத்தை நோக்கி செல்லலாம். வாகனங்கள் ஜி.கே. மூப்பனார் மேம்பால சர்விஸ் சாலையிலிருந்து டர்ன் புல்ஸ் விரிவாக்கம் நோக்கி செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து நேராக சேமியர்ஸ் சாலையில் சென்று அவர்கள் இலக்கை அடையலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்