திண்டுக்கல்

பேத்துப்பாறை இருக்கும் சாராயக் கடையை மூடினால் குடிப்பதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும் சாராயக் கடையை மூடக் கூடாது என்றும் ஆட்சியரிடம் குடிகாரர்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார்.

இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். மொத்தம் 389 மனுக்கள் பெறப்பட்டன. இதைத்தவிர மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 13 மனுக்களும் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவு பிறப்பித்தார்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி 1–வது வார்டு பகுதி மக்கள் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், “சங்குபிள்ளைபுதூர் கொல்லப்பட்டி சாலையில் தனியார் தோட்டத்தில் அரசு சாராயக் கடை கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில்தான் கிறிஸ்தவ கல்லறை தோட்டம் மற்றும் இந்துக்களுக்கான மயானம் உள்ளது. மேலும், அங்கு மதுக்கடை வந்தால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதை கருத்தில் கொண்டு அங்கு சாராயக் கடை அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அதில் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று கொடைக்கானல் பெருமாள்மலை, பேத்துப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த குடிகாரர்கள் ஆட்சியய்ர் டி.ஜி.வினயை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், “பெருமாள்மலையில் இருந்த சாராயக் கடை அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேத்துப்பாறை பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது, அந்த கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

அந்த மதுக்கடை மூடப்பட்டால் தினமும் குடிப்பதற்கு ரூ.20 பேருந்து கட்டணம் செலுத்தி கொடைக்கானலுக்குதான் நாங்கள் செல்ல வேண்டும். அங்கு நொறுக்குத்தீனி விலையும் அதிகமாக உள்ளது.

கூலி வேலைக்கு செல்லும் எங்களால் அவ்வளவு பணம் செலவளித்து குடிக்க முடியாது. அதே வேளையில் குடிக்காமலும் இருக்க முடியாது.

ஒரே நேரத்தில் மொத்தமாக சாராய பாட்டில்கள் வாங்கிச் செல்லலாம் என்றால், அதற்கும் காவலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

எனவே, பேத்துப்பாறை பிரிவில் இருக்கும் சாராயக் கடையை மூட மாவட்ட நிர்வாகம் முன்வரக்கூடாது” என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இந்திரவள்ளி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.