Drunken mobs mobilize in Kambalas garbage shop So close this shop ...
ஈரோடு
அந்தியூரில் உள்ள சாராயக் கடையை நோக்கி கும்பல் கும்பலா குப்பை மாதிரி குடிகாரர்கள் வந்து குவிகிறார்கள். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே, இந்த கடையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள மூலக்கடையில் அரசு பள்ளிக்கூடம், நடுநிலைப்பள்ளிக்கூடம், அரசு பெண்கள் விடுதி போன்றவை இருக்கிறது.
இவற்றிற்கு அருகில் பத்து ஆண்டுகளாக டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகளும், விடுதிக்கு செல்லும் மாணவிகளும் சாராயக் கடையை கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் தான், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அந்தியூர் எண்ணமங்கலம், மூலக்கடை, கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வந்த சாராயக் கடைகள் அடைக்கப்பட்டன. அதனால் குடிவெறியர்கள் சாராயத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு, மூலக்கடையில் பள்ளிக்கூடம் அருகே செயல்படும் இந்த சாராயக் கடையை படையெடுத்து அதிக அளவில் வரத் தொடங்கினர்.
எப்போதும் நீண்ட வரிசையில் நின்றுகொண்டு குடிகாரர்கள் சாராயத்தை வாங்குவதும், சாலையிலேயே நின்று கொண்டு சிலர் குடிப்பதும் அந்த வழியாக சென்று வந்த மக்களையும், மாணவ, மாணவிகளையும் பெரும் முகச்சுளிப்புக்கு ஆளாக்கியது.
இந்த நிலையில் நேற்று காலை 12 மணியளவில் மூலக்கடையைச் சேர்ந்த மக்கள் டாஸ்மாக் சாராயக் கடைக்கு திரண்டு வந்து, ‘உடனே கடையை மூடவேண்டும்” என்று கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த, அந்தியூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் காவலாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மக்கள் காவலாளர்களிடம் “ஏற்கனவே இந்த கடையில் குடிகாரர்களின் தொல்லை தாங்க முடியாது. இதுல மற்ற பகுதியில் இருந்தும் குடிக்கிறதுக்கு கும்பல் கும்பலா குப்பை மாதிரி குவிந்து வருகிரார்கள். குடிச்சிட்டு கேவலமான நிலையில் இங்கேயே படுத்தும் கொள்கிறார்கள். பெண்களும், மாணவ, மாணவிகளும் இந்த சாலையிலேயே போறதுக்கே அச்சப்படுகிறார்கள். அதனால் உடனே இந்த சாராயக் கடையை மூடனும்” என்று உத்தரவிட்டனர்.
அதற்கு காவலாளர்கள் மக்களிடம், ‘இப்போது போராட்டத்தை கைவிடுங்கள். இதுபற்று மாலை தாசில்தார் அலுவலகத்தில் பேசி நல்ல முடிவு எடுக்கலாம்” என்று கூறினர்.
அதை ஏற்று மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
