சேலம்

சேலத்தில் டிராவல்ஸ் அதிபர் மகன் போதையில் காரை காட்டுத் தனமாக ஓட்டி நடந்து சென்றவர்கள் மீது இடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓட்டியவர் இறந்தார்.

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து திருச்சி சாலை வழியாக சனிக்கிழமை இரவு சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த கார் சிக்னலில் நிற்காமலும், தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்ற மக்களை இடித்தும், சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது.

இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, சாலையில் இருந்து விலகி அலறி அடித்து ஓடினர். பின்னர், அந்த காரை விரட்டிப் பிடித்து மடக்கினர்.

அந்த காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார். அவர் அளவுக்கு அதிகமாக குடி போதையில் இருந்தது தெரிந்தது. அவர் போதையில் காட்டுத் தனமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் சினம் கொண்ட பொதுமக்கள் காரில் இருந்த அவரை பிடித்து வெளுத்து வாங்கினர்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும், கார் கண்ணாடி மற்றும் பக்கவாட்டு பகுதியை பொதுமக்கள் கற்களாலும், கட்டையாலும் அடித்து தூள் தூளாக்கினர்.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவலாளர்கள் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் மைக்கேல்ராஜ் என்பவரின் மகன் ஆசிஸ் இக்னோசியஸ் (25) என்பது தெரியவந்தது.

மேலும் அவர், தந்தையிடம் சண்டைப் போட்டுக் கெண்டு சென்னையில் இருந்து காரை எடுத்து ஊர், ஊராக சுற்றி வந்ததும், பிறகு சேலத்திற்கு வந்தபோது பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. அவருக்கு போதை பழக்கம் இருந்து வந்ததும் தெரிந்தது.

இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிஸ் இக்னோசியஸ் நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆசிஸ் இக்னோசியஸ் ஓட்டி வந்த காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் அடித்ததில் அவர் உயிரிழந்தாரா? அல்லது அதிகப்படியான போதையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்தாரா? என்பது குறித்து செவ்வாய்பேட்டை காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம், ஆசிஸ் இக்னோசியஸ் கார் ஓட்டியபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்த 10 பேரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் கார் ஓட்டி நடந்து சென்றவர்களை இடித்தும், வாகனங்களை சேதப்படுத்தியதால் அந்த இடம் பரபரப்புடன் காணப்பட்டது.