டூத்பேஸ்ட் வடிவில், தயாரிக்கப்பட்ட போதை பொருளை விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், அவட்ரகள் வைத்திருந்த 450 போதைப்பொருள் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தமிழக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், போதை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசாருக்கும் அவ்வப்போது தகவல் கிடைத்து வருகிறது. நூதன முறையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல் துலக்கும் பேஸ்டாக போதை பொருள் தயாரிக்கப்பட்டு, சென்னையில் விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாருக்கு வந்த இந்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை, பூக்கடை, வெங்கடாசலம் முதலியார் தெருவில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது, போதைப் பொருட்கள், பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் வடிவில் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். அந்த கவரை பிரித்து பார்த்த போலீசார், அதிர்ச்சி அடைந்தனர். பேஸ்டாக உள்ள இந்த போதைப் பொருள் நாக்கில் தடவிக் கொண்டால் போதை ஏற்படுத்தும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, இப்படி யாரும் நூதன முறையில் போதை பொருள் விற்பனை செய்தது இல்லை என்று கூறினர். 

அந்த வீட்டை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்து 450-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜேஷ் (48), மனோஜ் (44), ரோகித் (32) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கள் நிறுவனத்தின் டூத்பேஸ்தான் சிறந்தது என்று விளம்பரம் செய்து வரும் நிலையில், டூத்பேஸ்ட் வடிவில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.