Drought relief subsidy will be paid to the bank account as soon as possible
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதை அடுத்து மிக விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரண உதவித்தொகை செலுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
மன்னார்குடியில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு மன்னார்குடி உதவி ஆட்சியர் செல்வசுரபி தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் அசோகன் வரவேற்றார். முகாமை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியது:
“மன்னார்குடி நகராட்சியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது. மிக விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரண உதவித்தொகை செலுத்தப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவர்முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் 11 ஆயிரத்து 85 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதலால் தமிழக அரசின் நலத்திட்டங்களை அனைவரும் சரியான முறையில் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்த முகாமில் நகராட்சி ஆணையர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராமன், கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் ஆர்.ஜி.குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
