100 days working scheme increased as 150 days
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்ததால், 430 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “திருவாரூர் மாவட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கூடுதலான நாள்கள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கிராம ஊராட்சிகளில் பதிவு செய்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிகழாண்டு மார்ச் - 2017 வரை கூடுதலாக 50 நாள்கள் பணி வழங்க அரசு அனுமதித்து உள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வட்டார அலுவலர்களை அணுகி, கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள 50 பணி நாள்களை ஏற்கெனவே நடப்பாண்டில் 100 நாள்கள் பணிமுடித்த அனைத்து குடும்பத்தில் உள்ள பயனாளிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
