Asianet News TamilAsianet News Tamil

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்! சமூகநீதியை சிதைத்து சுரண்டலை ஊக்குவிப்பது தான் திமுக கொள்கையா?

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் உழைப்பைச் சுரண்டி, தனியார் மனிதவள நிறுவனங்களுக்கு வழங்கும் ஆள்குத்தகை முறையை தமிழக அரசு திணித்து வருகிறது. இது இயற்கை நீதிக்கு மட்டுமின்றி சமூகநீதிக்கும் எதிரான நடைமுறை ஆகும்.

Drivers Conductors on lease basis.. Anbumani condemns tvk
Author
First Published Jun 19, 2024, 2:01 PM IST | Last Updated Jun 19, 2024, 2:14 PM IST

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர்நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட முறையை அரசு பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க: Annamalai : கள்ளச்சாராய மரணம்.. இந்த இரண்டு அமைச்சர்களையும் பதவியில் இருந்து உடனே நீக்கிடுக- சீறும் அண்ணாமலை

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அச்சாணிகளாகத் திகழ்பவர்கள் அவற்றின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தான். அவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட வேண்டும்; அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் இயற்கை நீதி ஆகும். ஆனால், அத்தகைய முறைக்கு மூடுவிழா நடத்தி விட்டு, ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் உழைப்பைச் சுரண்டி, தனியார் மனிதவள நிறுவனங்களுக்கு வழங்கும் ஆள்குத்தகை முறையை தமிழக அரசு திணித்து வருகிறது. இது இயற்கை நீதிக்கு மட்டுமின்றி சமூகநீதிக்கும் எதிரான நடைமுறை ஆகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் திணிக்கப்பட்டிருக்கும் புதிய முறையின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான தனியார் மனிதவள நிறுவனங்களுக்கு தரப்படும். அதன்படி தனியார் நிறுவனத்தால் அனுப்பப் படும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதைவிட குறைவான அளவில் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கும். அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு வழங்கும்.

இது வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது.  இவற்றை விட பெரிய அநீதி, தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நியமனங்களில் எந்த வகையான இட ஒதுக்கீடும் வழங்கப்படாது. மொத்தத்தில் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்கும் போது சமூக நீதியும், தொழிலாளர்களின் உரிமைகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்.

சமூகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்ட சமூகங்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் எண்ணற்றவை; இந்தப் போராட்டத்தில் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் கணக்கில் அடங்காதவை. அதேபோல், அதிகார வர்க்கத்தினரால் சுரண்டப்படும் தொழிலாளர் உரிமையை மீட்டெடுப்பதற்காக உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் பயனாகவே 8 மணி நேர பணியும், பிற தொழிலாளர் உரிமைகளும் தொழிலாளர்களால் வென்றெடுக்கப் பட்டன. அவற்றின் சாட்சியாகவே சமூகநீதி நாளும், பாட்டாளிகள் நாளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் ஒற்றை ஆணையில் பறித்திருக்கிறது திமுக அரசு. இதன்மூலம் சமூகநீதி குறித்தும், தொழிலாளர் உரிமைகள் குறித்தும் பேசும் தகுதியை திமுக இழந்துவிட்டது.

இதையும் படிங்க:  கோட்டாட்சியரை கொலை செய்ய துணிஞ்சிட்டாங்கன்னா! ஆளுங்கட்சி ஆதரவு எந்த அளவு இருக்குன்னு பாத்துக்கங்க! அன்புமணி!

குத்தகை முறையில் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நியமிக்கப்படுவதை என்னென்ன காரணங்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கிறதோ, அதே காரணங்களுக்காக அந்த நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றமும் தடை விதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி,  குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது அபாயகரமான சோதனை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகளை சிறிதும் மதிக்காமல் தொழிலாளர் விரோத செயலில் அரசு இறங்கியுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியிலும் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முறை இலைமறை காய்மறையாக இருந்து வந்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் வழியில் அதை கடுமையாக எதிர்த்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு, அந்த பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7,000 & 8,000 மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கி விடும் அவலம் இந்த ‘அவுட்சோர்சிங்’முறையில் தாண்டவமாடுகிறது’’ என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.  இப்போது அதே சுரண்டல் நடைமுறையை திமுக அரசு தூக்கிப் பிடிப்பதன் மூலம் சமூக நீதி மற்றும் தொழிலாளர்கள் உரிமையை காப்பதில் அவர்களின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பது எந்தவித ஐயத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.

சமூகநீதிக்கும், தொழிலாளர் உரிமைக்கும் எதிரான குத்தகை முறை நியமனத்தை அரசு கைவிடவில்லை என்றால், 12 மணி நேர வேலை விவகாரத்தில் எதிர்கொண்டது போன்ற கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, தமிழக அரசு அதன் தவறுகளைத் திருத்திக் கொண்டு, குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். போக்குவரத்துத்துறை  பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios