Asianet News TamilAsianet News Tamil

திடீர் மாரடைப்பால் ஓட்டுநர் மரணம்; தறிக்கெட்டு ஓடிய சரக்கு வேன் பெட்டிக்கடை மீது மோதியதில் மக்கள் பீதி...

driver sudden Death heart attack People fear about crash by van
driver sudden Death heart attack People fear about crash by van...
Author
First Published Feb 23, 2018, 7:16 AM IST


ஈரோடு

ஈரோட்டில் திடீர் மாரடைப்பால் ஓட்டுநர் இறந்ததால் அவர் ஓட்டி வந்த சரக்கு வேன் தறிக்கெட்டு ஓடி சாலையோர பெட்டிக்கடை மீது மோதியது. இதில் பெட்டிக்கடை அருகில் இருந்த மக்கள் பீதியடைந்து அலறி ஓடினர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை கருப்பண்ணகோவில் பள்ளம் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (34). ஓட்டுநர். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுடைய மகள் தனுஷ்கா (6).

செந்தில்குமார் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய சரக்கு வேனை ஓட்டி வந்த நிலையில் திருப்பூரில் இருந்து நேற்று சென்னிமலையை அடுத்த பள்ளக்காட்டுபுதூர் அருகே சரக்கு வேனில் செந்தில்குமார் வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, செந்தில்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் வேனிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், வளைந்து நெளிந்து ஓடி எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த சொக்கலிங்கம் (43) என்பவரின் பெட்டிக்கடை மீது வேகமாக மோதியது.

வேன் மோத வருவதை பார்த்ததால் பெட்டிக்கடைக்குள் இருந்த சொக்கலிங்கத்தின் மனைவி சரஸ்வதி (35) தன்னுடைய மகன் தினேசை (5) தூக்கிக்கொண்டு கடையை விட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். மேலும், கடையின் அருகில் நின்று கொண்டிருந்த மக்களும் சிதறியடித்து ஓடினார்கள்.

இதுபற்றி சென்னிமலை காவலாளர்கள் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில், "திருப்பூரில் இருந்து சரக்குவேனில் செந்தில்குமார் வரும்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வரும்போது வழியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாரடைப்புக்கான மாத்திரையை வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சென்னிமலையை அடுத்த பள்ளக்காட்டுபுதூர் அருகே வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இதனால் தான் சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பெட்டிக்கடைமீது மோதி உள்ளது" என்பது தெரிய வந்தது.

இதுபற்றி காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios