விருதுநகர் 

விருதுநகரில் வறண்டு விட்ட குடிநீர் ஆதாரங்களால் கடுமையான குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதால் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரங்களே குடிநீர் விநியோகத்துக்கு பயன்பட்டு வருகிறது. 

நகராட்சிகளை பொருத்தவரை தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் ஓரளவு கைகொடுத்தாலும் நிலத்தடி நீராதாரங்கள்தான் குடிநீர் விநியோகம் சீராக நடக்க நிரந்தரமாக பயன்படும் நிலையில் உள்ளன.

விருதுநகர் நகராட்சி பகுதியை பொருத்தவரை ஆனைக்குட்டம் நீர்த் தேக்க வளாகத்தில் உள்ள உறைகிணறுகள் காரிச்சேரி, ஒண்டிப்புலி கல்குவாரிகள், சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கம் ஆகிய நீர் ஆதாரங்கள் வறட்சி காரணமாக வழக்கமான குடிநீர் அளவினை எடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. 

ஆனைக் குட்டத்தில் தற்போது ஆறு அடி தண்ணீரே உள்ளது. இதேநிலைதான் மற்ற நகராட்சிகளிலும் இருந்து வருகின்றது.

சிவகாசி நகராட்சியின் பிரதான குடிநீர் ஆதாரமான வெம்பக்கோட்டை அணையின் மொத்த உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 7 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. 

முப்பது ஆண்டுகளாக அணை தூர்வாரப்படாததால் தற்போது சகதிதான் உள்ளதால் இங்கிருந்து சிவகாசிக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும் சூழல் உள்ளது.

நகராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் கிடைத்துவந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குடிநீர் கிடைக்காமல் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 60 முதல் 70 சதவீதமே குடிநீர் கிடைக்கும் நிலை இருந்து வருகிறது. 

இன்னும் கோடைக் காலத்தில் தாமிரபரணியில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதுதவிர குழாய் உடைப்பு, மின்தடை போன்ற காரணங்களாலும் தாமிரபரணியில் இருந்து கிடைக்கும் தண்ணீர் தடைபடுகிறது. 

"தாமிரபரணி தண்ணீர் தடையில்லாமல் கிடைப்பதற்கு தனி மின்பாதை அமைக்க வேண்டும்" என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலை தொடர்வதால் குடிநீர் விநியோகத்தில்தான் பாதிப்பு ஏற்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளில் தாமிரபரணி தண்ணீர் விநியோகிக்க ரூ.570 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி தொடங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணி முழுமையாக முடிக்கப்படாமல் பல்வேறு கிராமங்களுக்கு இன்னும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்காத நிலை தொடர்கிறது. 

இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால் பஞ்சாயத்து பகுதிகளில் குழாய் உடைப்பு, நீர் ஆதார வறட்சி ஆகிய காரணங்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிதிப் பற்றாக்குறை காரணமாக தற்போதுள்ள பஞ்சாயத்து நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நகர் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை கடுமையாகி வருகிறது. அடுத்துவரும் நாட்களில் இப்பிரச்சனை மேலும் கடுமையாக வாய்ப்புள்ளது. எனவே குடிநீர் பிரச்சனையை சமாளிக்க உள்ளாட்சி நிர்வாகங்களும், மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கையாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் 11 பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் மூலம் பாதிப்புள்ள கிராமங்களை கண்டறிந்து குடிநீர் விநியோகத்தை சீரமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

நகர் பகுதிகளில் நிலத்தடி நீராதாரங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கிணறுகளை தூர்வாரவும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதற்கான நிதி மதிப்பீடு செய்து அரசிடம் இருந்து உரிய நிதி பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.