Drinking water board staff employees insist on providing cash benefits immediately
நாகப்பட்டினம்
ஓய்வுபெற்ற, மரணமடைந்த ஊழியர்களுக்குரிய பண பயன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். சங்கத்தை சேர்ந்த ஆனந்தகண்ணன், மனோகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் சீனிமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ஷெட்யூல் ஆப் ரேட் படி ஊதியம் வழங்க வேண்டும்.
இ.எஸ்.ஐ., இ.பி.எப். கணக்கு விவர பட்டியல்களை வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற, மரணமடைந்த ஊழியர்களுக்குரிய பண பயன்களை உடனே வழங்க வேண்டும்.
13.12.2017 பேச்சுவார்த்தையின் பலன்களை உடனே அமல்படுத்த வேண்டும்.
பழுதான மோட்டார்களை உடனே சரி செய்து, குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொருளாளர் அறிவொளி நன்றி தெரிவித்தார்.
