Asianet News TamilAsianet News Tamil

வறண்டு போன காவிரி; ஊற்றுத் தோண்டி தேங்கிய நீரை தலையில் தெளித்து ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்…

Dried cauvery The celebration of adiperukku is dried
Dried cauvery The celebration of adiperukku is dried
Author
First Published Aug 4, 2017, 8:29 AM IST


திருச்சி

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர் இல்லாததால் களையிழந்துபோன ஆடிப்பெருக்கு விழாவில் ஆற்றுப் படுகைகளில் ஊற்றுத் தோண்டி தேங்கிய நீரை தலையில் தெளித்து பெண்கள் காவிரி ஆற்றை வழிபட்டனர்.

தமிழகம் எங்கும் ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. மற்ற மாவட்டங்களை விட திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் இப்பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

ஆடிப்பெருக்கையொட்டி முசிறி, சிட்டிலரை, தும்பலம், சூரம்பட்டி, சேருகுடி, தா.பேட்டை, மங்கலம், வாளவந்தி, ஜெம்புநாதபுரம், மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்திருந்து காவிரித்தாயை வழிபட்டனர்.

திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

முசிறியில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. அப்போது பெண்கள் காவிரி ஆற்றில் ஊற்றுத் தோண்டி அதில் தேங்கிய தண்ணீரைத் தொட்டு வணங்கி காவிரி தாய்க்கு தேங்காய், பழங்கள், கரும்பு, மஞ்சள், குங்குமம், பச்சரிசி, வெல்லம் வைத்து சிறப்பு பூசை செய்தனர்.

அப்போது சுமங்கலி பெண்கள் தாலி நிலைக்க வேண்டியும், திருமணமாகாத இளம்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் காவிரி அன்னையை வேண்டிக் கொண்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், புதுமணத் தம்பதிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த கல்யாண மாலைகளை அங்கு தேங்கி நின்ற சிறிது தண்ணீரில் விட்டு காவிரி தாயை வழிபட்டனர்.

விவசாயிகள், இந்த வருடமாவது போதிய மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தேங்கியிருந்த மழைநீரை தலையில் தெளித்துக் கொண்டு பூசைகள் செய்தனர். கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios