விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா என்ற குலத்தொழில் கல்வி திணிப்பு திட்டம் என்பது பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி கொடுக்க வேண்டுமே தவிர, குரு சிஷ்ய முறையில் அப்பனிடமிருந்து பிள்ளை செய்ய வேண்டும் என்ற தொழிலுக்கு வழங்கக்கூடாது. குறிப்பாக, அரசின் இந்த திட்டத்திலேயே செருப்பு தைப்பவர்கள் போல் படங்களை எல்லாம் போட்டு இருக்கிறார்கள். இவர்களது பிள்ளைகள் எல்லாம் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சென்று ஐஏஎஸ் அதிகாரிகளாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் செல்லக்கூடாது என்பதற்காக, 18 வயது ஆன பிறகு இந்த தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு லட்சம் நிதி உதவி தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதில் ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள். இது மக்களுக்கு புரியவில்லை. ஒரு லட்சம் கொடுக்கிறார்களே, ஏன் இதை தடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இது விஸ்வகர்மா யோஜனா திட்டம் இல்லை. மனுதர்ம யோஜனா திட்டம்” என்று விமர்சித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆளுநர் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டிய ஆசிரியர் வீரமணி, “பைத்தியம் பிடித்தவர்கள் தொடர்ச்சியாக திரும்ப திரும்ப உளறுவது போல், ஆளுநர் உளறி வருகிறார். ஏனென்றால் அவர்கள் நம்புவது சாஸ்திரம், சனாதனம் போன்றவை. அந்த மனுதர்ம சாஸ்திரத்திலேயே திராவிடம் என்பது பத்தாவது அத்தியாயத்தில் வந்துள்ளது. இதில் திராவிடம் என்பது ஆங்கிலேயர் போட்டிருந்தால், இது 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்திருக்க வேண்டும். இது புராணங்களிலே இருக்கிறது. இதை கால்டுவெல், ஆங்கிலேயர்கள் எழுதினார்களா? இதை வேண்டுமென்றே திருப்பி திருப்பி ஆளுநர் பேசி வருகிறார்.” என்றார்.

சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தொடர்ந்து பேசிய அவர், “மனுதர்மம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மனுதர்மத்திலேயே இந்த திராவிடர்கள் என்ற வார்த்தை இருந்து வருகிறது. தூங்குகிறவர்களை எழுப்ப முடியும் தூங்குற மாதிரி பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. இப்படியே பேசி பேசி, ஆளுநர் தன்னை ஒரு சூப்பர் அரசியல்வாதிகள் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். ஒரே ஒரு விஷயத்தை இவர் திரும்பத் திரும்ப பேசு வருகிறார். இவரை பரிசோதனை செய்ய வேண்டும்.” என்றார்.

ஆளுநர் பேச பேச திராவிட இயக்க கொள்கைகளுக்கு தினமும் உரம் போட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்த ஆசிரியர் வீரமணி, “நீட் தேர்வு விவகாரத்தில் சட்டபூர்வமாக கையெழுத்து வாங்கி வருகிறார்கள். ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களில் தற்கொலைகள் நடக்கின்றன. வன்முறையில் இறங்கவில்லை, ரயிலை கொளுத்தவில்லை, சட்டபூர்வமாக பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கொடுத்தோம். அவர்கள் செய்யவில்லை என்பதை தெளிவாக மக்கள் உணர்வார்கள். இதற்கு பதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரே பதில் வரும். நீட், அதானி, அது இது எல்லாமே முடிவுக்கு வரும்.” என தெரிவித்தார்.