திருவனந்தபுரம்,
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நான்கு வருடங்களாக மருத்துவர்களிடம் பணத்தை திருடிய போலி பெண் மருத்துவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் மாவட்டம், கல்லரா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆர்யா (26). இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மயக்க மருத்துவம் தொடர்பான பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவி என்று கூறி பயிற்சி மருத்துவரைப் போல் செயல்பட்டு வந்தார்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் இவரை நம்பினர். எனவே, இவர் மருத்துவர்களின் ஓய்வு அறைகளுக்குள் தங்கு தடையின்றி சென்று வந்தார்.
ஓய்வு அறையில் மருத்துவர்கள் வைத்திருந்த பணம் அடிக்கடி திருட்டு போனது. இதனால், மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்த நிலையில் நேற்று மருத்துவர்களின் ஓய்வு அறைக்குள் சென்றுத் திரும்பிய ஆர்யா மீது பணியில் இருந்த செவிலியருக்கு சந்தேகம் எழுந்தது.
மயக்க மருத்துவ பயிற்சி மருத்துவருக்கு, மருத்துவர்களின் ஓய்வு அறையில் என்ன வேலை என்ற சந்தேகத்துடன் ஆர்யாவை விசாரித்தார். அப்போது ஆத்திரம் அடைந்த ஆர்யா கோபமாக திட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த செவிலியர், மருத்துவமனை ஊழியர்களிடம் விவரத்தை தெரிவித்தார். ஊழியர்கள் விரைந்து வந்து ஆர்யாவிடம் அடையாள அட்டையினை காண்பிக்கச் சொன்னார்கள். ஆனால் அடையாள அட்டை தவறி விட்டதாக ஆர்யா பொய் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
காவலாளர்கள் வந்து ஆர்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் போலி பயிற்சி மருத்துவர் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாக போலி பயிற்சி மருத்துவராக வலம் வந்து, மருத்துவர்களின் ஓய்வறைக்குள் சென்று பணத்தை பல முறை திருடியதை ஒப்புக் கொண்டார்.
பின்னர், காவலாளர்கள் வழக்கு பதிவு செய்து ஆர்யாவை கைது செய்தனர்.
