அரசு பஸ்ஸில் இருந்த புறாவுக்கு ஏன் டிக்கெட் வசூலிக்கவில்லை? என்று கூறி நடத்துனருக்கு டிக்கெட் பரிசோதகர் “மெமோ” கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் நகரில் இருந்து எளவாடி அருகே இருக்கும் ஒரு பழங்குடி கிராமத்துக்கு வியாழக்கிழமை மாலை ஒரு அரசு பஸ் சென்றது. அங்கு 80-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் அரூர் நகருக்கு திரும்பிக் கொண்டு இருந்தது.

அப்போது, அரூர் அருகே பஸ் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்ஸை நிறுத்தி, பயணிகள் டிக்கெட் பெற்று இருக்கிறார்களா என  ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஜன்னல் ஓரமாக 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நன்கு குடிபோதையில் அமர்ந்திருந்தார்.

அவர் அருகே ஒரு கூண்டில் புறா இருந்தது. போதையில் இருந்த அந்த பயணி, புறாவுடன் போதையில் ஏதோ பேசி உளறிக் கொண்டு இருந்தார். அந்த பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டபோது அவரும் தன்னிடம் இருந்த ஒரு டிக்கெட்டை கொடுத்தார். புறாவுக்கு எங்கே டிக்கெட் என்று கேட்டபோது அவர் புறாவுக்கெல்லம் டிக்கெட்டா என்று கூறி சிரித்துவிட்டு மீண்டும் புறாவுடன் பேசத் தொடங்கிவிட்டார்.

இதையடுத்து, பஸ்ஸின் நடத்துனரை அழைத்து “இந்த பயணி வைத்து இருந்த புறாவுக்கு டிக்கெட் ஏன் கொடுக்கவில்லை?”,  கட்டணம் ஏன் வாங்கவில்லை?, என்று டிக்கெட் பரிசோதகர் கேள்வி கேட்டார்.

அதற்கு பஸ் நடத்துனர் பதில் அளிக்கையில் “ அந்த பயணி பஸ்ஸில் ஏறும் போது, அவர் மட்டுமே வந்தார்,உடன் புறாவையும் கூண்டையும் கொண்டுவரவில்லை” என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த பதிலால் திருப்தி அடையாத டிக்கெட் பரிசோதகர் நடத்துனருக்கு “மெமோ” அளித்தார்.

இது சம்பவம் குறித்து அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி, புறாவுக்கு டிக்கெட் எடுப்பது அவசியமா? என்று கேட்டோம்.

 அதற்கு அவர்கள் அளித்த பதலில் “ போக்குவரத்து விதிகளின் படி, 30-க்கும் மேற்பட்ட புறாக்களை ஒருவர் கொண்டுவந்து பஸ்ஸில் ஏற்றினால், டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பகுதியை கட்டணமாக நடத்துனர் வசூலிக்க வேண்டும்.

ஆனால், ஒரு புறாவுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டுமா? என்று விதிகளில் இல்லை.

அதேசமயம், திங்கள்கிழமை அந்த டிக்கெட் பரிசோதகர் அந்த குறிப்பிட்ட பஸ் நடத்துனர் மீது அளிக்கும் “மெமோ” பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். அதுவரை பொறுமையா இருந்து பார்க்க வேண்டும். அவர் அளிக்கும் மெமோ சரியாக இருக்கும் பட்சத்தில் பஸ் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து சேலம் அரசு பஸ் கோட்டத்தில், பஸ் நடத்துனர்கள், தங்களின் பஸ்களில் ஏதேனும் பறவைகள், பிராணிகள் கொண்டு செல்லப்படுகிறதா என கழுப்பார்வை பார்த்து வருகிறார்கள்.