டாஸ்மாக் சாராயக் கடையினை அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் சாராயக் கடை வேண்டாம் என்றும் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் நகரில் இருந்த அனைத்து டாஸ்மாக் சாராயக் கடைகளும் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் மூன்று நாள்களுக்கு முன்பு செயங்கொண்டம் கீழக்குடியிருப்பு - மலங்கன்குடியிருப்பு கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள வயல் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று திறக்கப்பட்டது.

இந்தக் கடைக்கு நேற்று முன்தினம் சாராய பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மலங்கன்குடியிருப்பு வழியாக வந்தது. அப்போது அந்த லாரியை மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் லாரி ஓட்டுநர் சாராய பாட்டில்களை இறக்காமல் திரும்பி சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து காவலாளர்கள் பாதுகாப்புடன் இரவோடு இரவாக சாராய பாட்டில்கள் டாஸ்மாக் சாராயக் கடையில் இறக்கி வைக்கப்பட்டது.

இதனையறிந்த மலங்கன்குடியிருப்பு கிராம மக்கள் நேற்று மதியம் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்கவிடாமல் 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அம்மகள் “எங்கள் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி, விவசாய நிலங்களில் பெண்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தற்போது டாஸ்மாக் சாராயக் கடையிருக்கும் இடத்தை சுற்றி விவசாய நிலங்கள், மனை பகுதிகளாக மாறி வருகிறது. இதனால் நாங்கள் வீடு கட்ட ஏற்பாடு செய்து வருகின்றோம்.

மேலும், இந்த வயல் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் இருபுறமும் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் அதிகமாக மோட்டார் சைக்கிள்கள் செல்வதால், எங்கள் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை என்று கருதி முட்களை போட்டு அடைத்துள்ளோம்.

எனவே, டாஸ்மாக் சாராயக் கடையினை அதிகாரிகள் காலி செய்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் சாராயக் கடை வேண்டாம்” என்றுத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த செயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுசாமி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவலாளர்கள் இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனுவாக எழுதி ஆட்சியரிடம் கொடுங்கள் என்று கூறினர்.

இதனையேற்று மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.