காஞ்சிபுரம் 

எங்கள் பகுதியில் அமையவிருக்கும் எட்டு வழி பசுமைச் சாலைக்கான இழப்பீடும், மாற்று இடம் எதுவும் வேண்டாம். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று காஞ்சிபுர ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரும்புலியூர் கிராம மக்கள் நேற்று காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரளாக வந்து கோரிக்கை மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில், "காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்தில் உள்ளது அரும்புலியூர் கிராமம். இந்த கிராமம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 

இந்த கிராமத்தின் வழியாக சென்னை -  சேலம் எட்டு வழிச் சாலை பசுமைத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

இந்த சாலைக்காக அவ்வழியில் உள்ள 20 வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவை கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், எங்களது உடைமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இழப்பீடு, மாற்று இடம் ஆகியவற்றில் எங்களுக்கு உடன்பாடில்லை.  அதனால் இந்தத் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். 

மேலும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வீடுகளை இழப்போர் ஆகியோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 

எனவே, இந்தத் திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டாம். ஆட்சியர் எங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டனர். 

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்டச் செயலாளார் கே.நேரு ஆகியோர்  உடனிருந்தனர்.