அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில், அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான நபருக்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அந்த பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (30). இவர், கடந்த 21–8–2012 அன்று மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த போது திருச்சுழிக்கு சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது.

இதில் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், விபத்தில் காயம் ஏற்பட்ட தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று செந்தில்குமார் அருப்புக்கோட்டை துணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்தவ ழக்கினை விசாரித்த நீதிபதி கண்ணன் ரூ.2 இலட்சத்து 60 ஆயிரத்து 652 இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நான்கு வருடங்களாகியும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

எனவே, அரசு பேருந்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.