documents and 7 kg gold captured from dinakarans brother baskaran house

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று துவங்கிய சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய் இடங்களில் மேற்கொண்ட சோதனை பரபரப்பைக் கிளப்பியது. இந்த சோதனை இன்றும் தொடர்கிறது. 

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தினகரன் சகோதரர் பாஸ்கரன் இல்லத்தில் மேற்கொண்ட வருமான வரி சோதனையின் போது, அவரது இல்லத்தில் இருந்து 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். மேலும் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடான பண பரிவர்த்தனை நடந்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, எங்களிடம் ஒன்றும் இல்லை. யாராவது வந்து அவர்களாகவே வைத்து விட்டு, பிறகு எடுத்தது போல் கணக்கு காட்டுவார்கள். எனவே என் பண்ணை வீட்டில் சோதனைக்குச் சென்ற போது, வழக்கறிஞர்களை பார்க்கச் சொன்னேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், தினகரன் சகோதரர் பாஸ்கரன் வீட்டில் இருந்து 7 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆவணங்கள் பல சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலா பெயரில் செயல்பட்ட, போலி நிறுவனங்கள் எனக் கண்டறியப்பட்ட, பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா தொலைக்காட்சிக்குத் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மோசடி தொடர்பாக கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலும் வரி ஏய்ப்புத் தொடர்பாகவும் சோதனைகள் நடத்தப்படுவதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், எதன் அடிப்படையில் சோதனை என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

187 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமையான இன்றும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.