Doctors fighting for the 4th day to reclaim discounted reservation

கோயம்புத்தூர்

தள்ளுபடி செய்யப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்ககோரி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 4–வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு படிக்க 50 சதவீத இடஒதுக்கீடு முறை இதுவரை இருந்து வந்தது. இதனை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் தங்களுக்கு இடஒதுக்கீட்டில் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு மீண்டும் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

நேற்றோடு இந்த போராட்டம் 4–வது நாளாக தொடர்ந்தது.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நூறு பெண் மருத்துவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயசிங் முன்னிலை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று ஆட்சியர் ஹரிகரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

இவர்களது போராட்டம் ஒருபக்கம் நடந்துக் கொண்டிருந்தாலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை எந்தவித குறையுமின்றி மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவுகளில் தேவையான மருத்துவர்கள் உள்ளனர். புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு உதவி மருத்துவர்கள், மூத்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சைக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.