மதுரை அருகே குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறால் அரசு மருத்துவர் ஒருவர் விஷ ஊசிப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது நிரம்பிய மருத்துவர் அருண்பிரகாஷ், கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இன்னும் திருமணமாகாத நிலையில், மருத்துவத்துறையில் உயர்கல்வி படிப்பது சம்பந்தமாக அருண்பிரகாஷிற்கும், அவரது தந்தை சுந்தர மகாலிங்கத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் இன்று பணிக்கு வந்த அருண்பிரகாஷ், விஷஊசி போட்டு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். வெகுநேரமாக உடல் அசைவின்றி கிடந்ததால் சந்தேகமடைந்த பணியாளர்கள், அவரது தந்தை சுந்தர மகாலிங்கத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அருண்பிரகாஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்நிலையில் அருண்பிரகாஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது பெற்றோருக்கு எழுதிய கடித்தத்தில், அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அருண்பிரகாஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.