நெல்லை - சென்னை வந்தே பாரத்: டிக்கெட் விலை எவ்வளவு?
நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை - மைசூரு, சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வருகிற 24ஆம் தேதி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார். இது தவிர, இந்தூர் - ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் - உதய்பூர், பூரி - ரூர்கேலா, பாட்னா - ஹௌரா, ஜெய்ப்பூர் - சண்டிகர் இடையேயான வந்தே பாரத் ரயிலையும் அவர் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், சென்னை-விசாகப்பட்டினம், காசர்கோடு-திருவனந்தபுரம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி நடந்தால், தெற்கு ரயில்வேக்கு கூடுதலாக இரண்டு வந்தே பாரத் ரயில்கள் கிடைக்கும்.
திருநெல்வேலி - சென்னை இடையே மணிக்கு 83.30கி.மீ வேகத்தில், மொத்தம் 653 கி.மீ தூரம் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலானது, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பும் ரயில், பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையை வந்தடையும். மறுமார்க்கத்தில் பிற்பகல் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி இரவு 10:40 மணிக்கு நெல்லையை அடையும் என தெரிகிறது.
சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும். மேலும், செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் மற்ற அனைத்து நாட்களிலும் திருநெல்வேலி - சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சாதாரண ஏசி வகுப்பு (ஏசி சேர் கார்) கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 எனவும், ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் (எக்கனாமிக் சேர் கார்) ரூ.3,025 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களை ஒப்பிடும் போதும் இந்த விலை மிகவும் குறைவானதே. அத்துடன், வந்தே பாரத் ரயில்களில் இரண்டு வேளை உணவு, டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவையும் வழங்கப்படும். இவற்றுக்கும் சேர்த்துதான் இந்த டிக்கெட் விலை.