கன்னியாகுமரி

முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியை இணைக்க கூடாது என்றும் பாரம்பரியமாக வாழும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் மலையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. 

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமை வகித்தார். அவர் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

இந்த கூட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மனு கொடுத்துச் சென்றனர்.

இதில், மலையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சார்பில் தோவாளை தடிக்காரன்கோணம் காமராஜபுரத்தைச் சேர்ந்த ஜினோ மற்றும் பலர் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "களக்காடு  -  முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியின் வீரப்புலி காப்புகாடு, அசம்பு காப்புகாடு போன்ற பகுதிகளை இணைக்க முயற்சிகள் நடக்கின்றன. 

இங்கு ஆறு சிற்றூராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளன. மேலும் அரசு கிராம்பு தோட்டம், அரசு இரப்பர் கழகம், 100-க்கும் மேற்பட்ட தனியார் தோட்டங்கள் இருக்கின்றன.

இந்தப் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். 

இதனை கருத்தில் கொள்ளாமல் சிலரின் தவறான பரிந்துரையால் முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர்.

மக்கள் அதிகமாக வாழும் இந்தப் பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைத்தால் கூலி தொழிலாளர்கள் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்படும். 

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளில் இயற்கையாகவே யானைகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு யானைகள் சரணாலயம் என அறிவிப்பு பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை புனரமைப்பு செய்யவோ, யானைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ எந்த முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு மாறாக எங்கேனும் பிடிபடும் புலிகளை கொண்டுவிட்டும், சில ஆண்டுகளுக்கு முன் வாவுபலி பொருட்காட்சியில் மீட்கப்பட்ட புலிகளை வைத்தும் முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்க அதிகாரிகள் முயலுகிறார்கள்.

எனவே, முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் கன்னியாகுமரி வனப்பகுதியை இணைக்க கூடாது. அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளின் உடமைகளையும், உயிரையும் பாதுகாக்க வேண்டும். மேலும், பாரம்பரியமாக வாழும் யானைகளை பாதுகாக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.