Do not want gas just enough wood gas cylinder kick out protest - neduvasal 92

புதுக்கோட்டை

நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்த்இன் 92-வது நாளில் சமைப்பதற்கு எங்களுக்கு இனி சமையல் கியாஸ் வேண்டாம், விறகு வைத்தே சமைத்துக் கொள்கிறோம் என்பதை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டரை காலால் எட்டி உதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

விவசாய நிலத்தை மலடாக்கி பாலைவனமாக்கும் இந்த திட்டத்தைக் கண்டித்து , நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர்.

முதற்கட்ட போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், மக்களுக்கு விருப்பமில்லாத திட்டங்கள் எதையும் மத்திய மோடி அரசு செயல்படுத்தாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் மற்ரும் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தலின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், போராட்டம் கைவிடப்பட்ட அடுத்த இரண்டு நாள்களுக்குள் ஐட்ரோகார்பனுக்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. அதன்பின்னரே இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கியது.

அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 92-வது நாளாக நேற்று நடைபெற்றப் போராட்டத்தில், ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டக் களத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, உதவி ஆட்சியர் (பொறுப்பு) ஜெயபாரதி, ஆலங்குடி தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். அதனால், போராட்டத்தை நீங்கள் கைவிடவேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் இதேபோல சொல்லிதான் எங்களை ஏமாற்றிவிட்டார் என்றும் 92 நாட்களாக போராடும் எங்களை அரசு கண்டு கொள்ளவில்லை. எந்த அரசு அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை. ஏற்கனவே வாக்குறுதியை நம்பிப் போராட்டத்தை கைவிட்டு ஏமாந்து விட்டோம். இப்போது, ஏமாற மாட்டோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் எங்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வராதீர்கள், இங்கிருந்து உடனே வெளியேறுங்கள் என்று சத்தம் போட்டபடி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. மேலும், மக்கள் தங்கள் போராட்டத்தில் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் இருப்பதை சுதாரித்துக் கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்ய கோரி, சமைப்பதற்கு எங்களுக்கு இனி சமையல் கியாஸ் வேண்டாம், விறகு வைத்தே சமைத்துக் கொள்கிறோம் என்பதை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டரை காலால் எட்டி உதைத்துவிட்டு, விறகு அடுப்பில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பங்கேற்று போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.