இராமநாதபுரம்
 
இராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த டிராக்டர் மற்றும் லாரிகளை அப்பகுதி கிராம மக்கள் தடுத்து நிறுத்தி தண்ணீர் எடுக்க கூடாது என்று திருப்பி அனுப்பினர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக இருப்பதால் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

மேலும், இந்தப் பகுதியில் ஆழ்குழாய்கள் அமைத்து சுற்று வட்டார பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்செல்ல தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அழகன்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுக்க கிராம மக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். 

எனினும், தனியார் சிலர் தங்களது இடங்களில் கிணறுகள் அமைத்து தண்ணீரை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு நாள்தோறும் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை இந்து - முஸ்லிம் ஐக்கிய சபை நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். 

அதன்பின்னரும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அழகன்குளத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதனை மீறி தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று அழகன்குளம் பகுதியில் தண்ணீர் எடுக்க வந்த டிராக்டர் மற்றும் லாரிகளை அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி உயர்நீதிமன்ற உத்தரவை காண்பித்து இனிமேல் இந்த பகுதியில் தண்ணீர் எடுக்க கூடாது என்று கூறி திருப்பி அனுப்பினர். 

இப்படி தண்ணீர் எடுக்க தனியார் வாகனங்கள் அனைத்தையும் அப்பகுதி மக்கள் வழிமறித்து நீதிமன்ற உத்தரவை காண்பித்து அனைவரையும் திருப்பி அனுப்பினர்.