பெரம்பலூர் 

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகளை பாதிக்கும் கிரஷர், கல்குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட காரை மலையப்ப நகரைச் சேர்ந்த நரிக்குறவர்வர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கச் சென்றனர்.

இவர்களுக்கு தமிழ்நாடு நரிக்குறவர்வர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சுப்ரமணியன் தலைமைத் தாங்கினார். 

அப்போது, ஆட்சியர் அலுவலகம் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தி உங்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்று அனுமதி மறுத்தனர். 

இதனையடுத்து, நரிக்குறவர்கள் அந்த இடத்திலேயே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர் ஒருவர் ஆடைகளைக் களைந்து, அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபெட்டில் இருந்து பெட்ரோலைப் பிடித்துவந்து, தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளர்கள் உடனே அவரை மீட்டனர்.  பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் உள்ளே சென்ற நரிக்குறவர்கள் மாவட்ட வருவாய் ஆ.அழகிரிசாமியிடம் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "காரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையப்ப நகர், இராமலிங்கம் நகரில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறோம். 

இங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதனருகே சுமார் 400 மீட்டர் தொலைவில் கிரஷர் மர்றும் கல்குவாரி அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இங்கு, கிரஷர், கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே, மலையப்ப நகரில் கிரஷர் அமைப்பதை நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்தனர்.