திருப்பூர்

திருப்பூரில் நான்கு ஊராட்சிகளைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சாராயக் கடைகளை அமைக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுக்களால் ஆட்சியரகமே அதிர்ந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமை தாங்கினார். இதில், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்கு வந்த வீரபாண்டி பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “எங்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து கருப்பக் கௌண்டம்பாளையம் செல்லும் ஓடைப் பகுதியில் அரசு சாராயக் கடை திறக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த சாராயக் கடையை மூட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று, காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட கீரனூர் ஊராட்சி, வடசின்னாரி பாளையம் ஊராட்சி, பல்லடம், கரைப்புதூர் ஊராட்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவிலும் தங்கள் ஊரில் சாராயக்கடை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனுக்களை ஆட்சியரிடம் கொடுத்தனர்.

இப்படி நான்கு ஊராட்சிகளைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் எங்கள் பகுதியில் சாராயக் கடையை அமைக்கக் கூடாது என்று ஆட்சியரிடத்தில் மனு அளித்ததைக் கண்டு ஆட்சியர் அலுவலகமே அதிர்ந்தது.