2.0 படத்தின் டீசர், இணையதளத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ஆவேசமாக கூறியுள்ளார்.

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் - ரஜினி கூட்டணியில் ஹாட்ரிக் அடிக்கும் முனையில் உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் மெகா பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் இந்த
படத்தில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2.0 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப பணிகள் முடிய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக கூறி அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 2.0 படத்தின் டீசர் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை யூடியூப்-ல் இருந்து நிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசரும்
இணையதளத்தில் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ ரிலீசுக்கு முன்பாகவே திருட்டுத்தனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார். ஒரு சில நொடி உற்சாகத்துக்காக, திரைப்படத்தை உருவாக்குபவர்களின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்ற செயலாகும் என்று ஆவேசமாக கூறியுள்ளார். டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துக் கொள்ளுங்கள் என்றும் சௌந்தர்யா காட்டமாக கூறியுள்ளார்.