ஈரோடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள, ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர்.

“பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

8–வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 1–1–2016 முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு சார்பில் 22–ஆம் தேதி (நேற்று) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களும், அரசு ஆசிரியர்களும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும் அரசு ஊழியர்களும், அரசு ஆசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்கள் யாரும் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடியது.

அரசுப் பணிகள் முழுவதும் முடங்கியது. போராட்டம் குறித்து மக்களுக்கு ஏற்கனவே தெரிந்ததால் அரசு அலுவலகங்களுக்கு வருவதை தவிர்த்தனர்.

ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்ததால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் பணிக்கு சென்றனர். பெரும்பாலான பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்பாபு, வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன், காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பேசினார்கள்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புத் தொடர்பாளர் சோமசுந்தரம், ‘‘ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் 21 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அரசு அலுவலக பணிகள் முழுமையாக முடங்கியது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. கிராமப்புறங்களில் பல்வேறு தொடக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் ஒருவர்கூட இல்லை.

இதேபோல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7–ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 26–ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.