கிருஷ்ணகிரி

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் சி.கதிரவன் நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

எனவே, களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் சவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீர் நிலைகளில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களுடைய விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படாது.

எனவே, சிலைகளை கிருஷ்ணகிரி கோட்டத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி அணை, இருமத்தூர் தென்பெண்ணையாறு, பாம்பாறு அணை ஆகிய இடங்களில் கரைக்கலாம்.

ஒசூர் கோட்டத்துக்கு உள்பட்ட தளி ஏரி, ராமபுரம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, சூளகிரி, பாகலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பிளிகுண்டு ஏரி, கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிரெட்டி ஏரி, மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் கௌரம்மா ஏரி, பேரிகை பகுதியைச் சேர்ந்தவர்கள் கோணமானகுட்டை,

ஒசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கெலவரப்பள்ளி அணை, தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டாளம்மன் ஏரி, மத்திகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் காணூர் ஏரி, குருப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் அச்செட்டிப்பள்ளி ஏரியிலும் சிலைகளை கரைக்கலாம்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தார்.