Do not contact anyone with the MLAs of Ambur and Gudiyatham - KC Veeramani
வேலூர்
சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே தினகரனுடன் சென்றுள்ள ஆம்பூர், குடியாத்தம் எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், உமராபாத்தில், பேரணாம்பட்டு நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதற்கு ஒன்றிய அவைத் தலைவர் என்.ஆர்.தேவராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சி.வி.வெங்கடேசன், நகரச் செயலாளர் எல்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பொகளூர் டி.பிரபாகரன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று பேசியது:
“வருகிற 9–ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் வகையில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால் வெளியேற்றப்பட்டவர் டி.டி.வி.தினகரன். அவர் நிர்வாகிகளை மாற்றம் செய்து அறிவித்து வருகிறார். அவரது அறிவிப்புகள் எதுவும் செல்லாது. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார். அவர்களுடன் குடியாத்தம், ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் சென்றுள்ளனர்.
அவர்கள் தேர்தல் நேரத்தில் ஒரு ரூபாய் கூட சொந்தப் பணத்தில் செலவு செய்யவில்லை. கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்தி உழைத்து வெற்றி பெற செய்தோம். அந்த நன்றியை மறந்துவிட்டு சென்றுள்ளனர்.
வாக்களித்த மக்களையும், கட்சியினரையும் புறக்கணித்துவிட்டு தங்களது சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அங்கு சென்றுள்ளனர். அதனால் அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்.
அவர்கள் தொண்டர்களை ஆட்டுமந்தை போல் பின்னால் வந்து விடுவார்கள் என நினைத்து விட்டனர். அது ஒரு போதும் நடக்காது. ஒரு கிளை செயலாளர் கூட அவர்களை சந்திக்ககூடாது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு தொடர்ந்து மக்களுக்கு நன்மைகளை செய்யும். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும், என்னையும், கட்சி நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ளுங்கள்” என்று அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் நகர அவைத் தலைவர் முஹமத்பாஷா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முகானே பசூலூர்ரஹ்மான், முன்னாள் எம்.எல்.ஏ. கனகதாரா, நகர துனை செயலாளர் சிவாஜி, மாவட்ட பிரதிநிதி இன்பரசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வேலுமணி, புனிதா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
