ஒகி போன்றதொரு புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை மீண்டும் தாக்க தற்போது வாய்ப்பு இல்லை எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான ஒகி புயல் காரணமாக தமிழக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதங்கள் அடைந்தன. 

புயல் பற்றி முறையான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படாததால், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் ஏராளமானோர் மாயமாகினர். 

இந்நிலையில், கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தீவிரம் அடைந்துள்ளது. 


எனவே லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து சமூக வலைதளங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒகி புயல் போன்று மீண்டும் ஒரு புயல் தாக்க உள்ளதாக செய்திகள் வைரலாகி வருகிறது. 

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், தற்போது உருவாகியுள்ளது மிகவும் வலுகுறைந்த ஒன்று காற்றழுத்த தாழ்வு நிலைதான் எனவும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வேண்டுமானால் மாறலாமே தவிர, ஒகி புயல் போன்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார். 

எனவேவதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கோடையை தணிக்கும் விதமாக தெற்கு, மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இடியுடன் கூடிய மழையை அனுபவிக்க தயாராகுங்கள் மக்களே என்றும் வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.