பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் அதிக மதிப்பெண்ணும் பணமும் அளிக்கப்படும் என்று கல்லூரி பேராசிரியை ஒருவர், மாணவிகளிடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகதுக்குச் சென்று வருவது வழக்கம்.

அப்படி சென்றபோது, அங்குள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள், கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன், பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி 4 மாணவிகளிடம், நிர்மலா பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கணிதத்துறை பேராசிரியை நிர்மலாவிடம் பேசும் மாணவிகள், தங்களுக்கு விருப்பமில்லை என்றும் இது குறித்து பேச வேண்டாம் என்றும் மறுப்பு தெரிக்கின்றனர். ஆனாலும், அந்த மாணவிகளிடம் நிர்மலா தொடர்ந்து நிர்பந்தப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரை கல்லூரி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், புரோக்கர் போல பேசிய பேராசிரியையின் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. 

இதனால், பேராசிரியை நிர்மலாவி 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளிடம் பேசியதை ஒப்புக் கொண்டுள்ள பேராசிரியை நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக தற்போது கூறி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த கல்லூரியில் பயில்கின்ற மற்ற மாணவிகளின் பெற்றோரிடையே கடும் அதர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேராசிரியை நிர்மலா, மாணவிகளுடன் நடத்திய உரையாடலின் பின்னணியில் உள்ள மதுரை பல்கலைக்கழக அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து உயர் கல்வி துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.