Chief Minister Mk Stalin: 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கொளரவித்தார்.

தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்க உத்தரவிட்டு செயல்படுத்தி வருவது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

திருவள்ளுவர் திருநாள் விருதுகள்

அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில்,

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கும், 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் திருமதி அ.அருள்மொழி அவர்களுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது திரு.சிந்தனைச் செல்வன் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது மாண்புமிகு நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது திரு.எஸ்.எம்.இதயத்துல்லா அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை திரு.ஜெயந்தா அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் திரு.யுகபாரதி அவர்களுக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அவர்களுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் சு.செல்லப்பா அவர்களுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது திரு.விடுதலை விரும்பி அவர்களுக்கும், என மொத்தம் 10 விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கி, சிறப்பித்தார்.

விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பட்டது.

2025-ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்கு மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய மூன்று வகைப்பாட்டில் ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப்பாட்டில் இலக்கியச் சுடர் திரு.த.இராமலிங்கம் அவர்களுக்கும், ஆய்வுத் தமிழ் வகைப்பாட்டில் எழுத்தாளர் திரு.சி. மகேந்திரன் அவர்களுக்கும், படைப்புத்தமிழ் வகைப்பாட்டில் திரு. இரா. நரேந்திரகுமார் அவர்களுக்கும், என மூன்று விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் இலக்கிய மாமணி விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.