கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் மீன்களுக்கு பாதிப்பில்லை மீன் உணவை உண்பதால் பிரச்சனை இல்லை என அமைச்சர் ஜெயகுமார் மீன் சாப்பிட்டு பேட்டி அளித்தார்.

காமராஜர் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் எம்.டி.பிடபுள்யூ மாப்பிள் என்ற கப்பலும் பெட்ரோலிய ஆயில் ஏற்றிய எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் நேருக்கு நேர் மோதியதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் உடைப்பு ஏற்பட்டு கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்து பரவ ஆரம்பித்தது .

கழிவு எண்ணெயை பிரித்து எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் படலம் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவி வருகிறது. அது மேலும் மஹாபலிபுரம் கடற்கரை வரை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எண்ணெய் கடலில் பரவிய காரணத்தால் கடலில் உள்ள உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. இதுவரை நூற்றுக்கும் மேற்ப்பட்ட உலகின் அரிய வகை ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.

கடலில் வலையையை வீசினால் அதிலுள்ள எண்ணெய் படலத்தால் வலைகள் பாதிக்கப்பட்டு உப்யோகமில்லாமல் போவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வலைகள் எதற்கும் உபயோகமில்லாமல் போய் விட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பிடித்து வரப்படும் மீன்களையும் பொதுமக்கள் வாங்க தயங்குகின்றனர். இதனால் மீன் பிடி தொழிலே பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை மறுக்கும் விதத்தில் அமைச்சர் ஜெயகுமார் , பெஞ்சமின் உள்ளிட்டோர் இன்று மீன் உணவை உண்டனர். கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மீன் உணவை அமைச்சர்கள் சாப்பிட்டனர். 

பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார் கடலில் மிதக்கும் எண்ணெய் படலம் பெரும்பாலும் கரையில் தான் ஒதுங்கியுள்ளது. மீன் பிடி என்பது ஆழ்கடலில் உள்ளது ஆகவே மீன்களில் இதன் பாதிப்பு இல்லை பொதுமக்கள் நம்பி சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.

மேலும் இதற்காக பிரத்யேகமாக அனுப்பபட்ட ஆராய்ச்சியில் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்ற ஆய்வு முடிவும் வந்துள்ளது. ஆகவே தாராளமாக நம்பி மீன் உணவுகளை உண்ணலாம் என்று தானும் மீன் உணவை சாப்பிட்டு காட்டினார்.