தவெக தலைவர் விஜய், கஜா புயல் குறித்து பேசியதற்கு திமுகவின் ஜெயராமன் ஃபேஸ்புக்கில் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து அவர் எழுதிய சமூக ஊடங்ங்களில் வைரலாகியுள்ளது.
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தமிழ்நாடு வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய் நேற்று (செப்டம்பர் 20, 2025) கஜா புயல் குறித்து பேசியதற்கு, தி.மு.க.வின் ஜெயராமன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார்.
அப்போது மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்து ஜெயராமன் எழுதியுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்தான் டி.ஆர்.பி. ராஜா
விஜய்யின் பேச்சைக் குறிப்பிட்டு ஜெயராமன் தனது பதிவில், "கஜா புயலின் போது இவர் உன்னைப்போல் பனையூர் பங்களாவில் மல்லாக்க படுத்துக் கிடந்தவரல்ல.. களத்தில் இறங்கி மக்கள் துயர் தீர்த்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர். இன்று தொழில் துறை அமைச்சர்.. அவர் தான் டி.ஆர்.பி.ராஜா" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அவர் பெயரை உச்சரிக்க உனக்கு தகுதி இருக்கா அணில்?" என்றும் ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு இது தி.மு.க. தரப்பில் இருந்து வந்த முதல் நேரடியான மற்றும் காரசாரமான எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
முன்னதாக, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் கூட்டங்களில் பேசிய தவெக தலைவர் விஜய், கஜா புயல் பாதிப்பின் போது மக்கள் துயரமடைந்ததாகவும், அப்போது ஆட்சியிலிருந்தவர்கள் உரிய உதவிகளை செய்யவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
விஜய் அந்தப் பேச்சில் தற்போதைய தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை மறைமுகமாக விமர்சிப்பதாகக் கருதி, ஜெயராமன் இவ்வாறு பதிலளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஃபேஸ்புக் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தி.மு.க. மற்றும் தவெக தொண்டர்கள் இடையே கடுமையான கருத்து மோதல்களையும் இது உருவாக்கியுள்ளது.
