நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை: கனிமொழி!

நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

DMK never opposes good schemes says kanimozhi after pm modi speech smp

பிரதமர் மோடி நேற்றும், இன்றும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடந்த பிராமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர், மதுரை வந்த அவர், மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, மதுரையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கினார். பிரதமர் மோடி வருகையையொட்டி, மதுரை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர் தங்கியிருந்த ஹோட்டலை சுற்றி அனைத்து கடைகளுமே அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கடைக்காரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மதுரையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்துக்கு சென்றார். அங்கு நடைபெற்ற அரசு விழாவில், சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். குறிப்பாக, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர், நெல்லை சென்று அங்கு நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் அவர் மஹாராஷ்டிரா மாநிலம் செல்லவுள்ளார்.

முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மேடையில் திமுக எம்.பி. கனிமொழியை வைத்துக் கொண்டே திமுகவை கடுமையாக விமர்சித்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஒரு சேவகனாக வந்துள்ளதாக தெரிவித்தார்.

“இன்று தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் டெல்லியில் ஆட்சியில் இருந்தார்கள்.  மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்காக எதையும் அவர்கள் செய்யவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு திமுக எதையும் செய்யவில்லை.” என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

“நான் இங்கே உரையாற்றுவது ஓர் அரசியல் கட்சியின் சித்தாந்தமோ, தனிப்பட்ட கோட்பாடோ கிடையாது. இங்கே நான் உரையாற்றுவது தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான கோட்பாடு ஆகும். வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டை தமிழக அரசு செய்தியாக வெளியிடுவதில்லை. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. இன்று மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி இவற்றையெல்லாம் செய்ய விடாது இருந்தாலும் செய்துள்ளோம். தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளைத் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்.” எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

அத்துடன், கனிமொழி எம்.பி.யின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. வெறுமனே, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இந்த நிலையில், எங்களது பெயரை சொல்லக் கூட பிரதமருக்கு மனமில்லை என கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இதுவரை தமிழக முதல்வர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை. மாநில அரசின் திட்டங்களுக்குத்தான் மத்திய பாஜக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் அந்த வீட்டிற்கு பெயர் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம் என வைத்து ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள்” என்றார்.

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்: விண்வெளிக்கும் செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் யார்?

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலம் வழங்கியது மாநில அரசுதான். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி. எங்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என கனிமொழி தெரிவித்தார்.

திமுக காணாமல் போகும் என்று சொன்ன பலர் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற கனிமொழி எம்.பி., “அரசியல் வேறு மதம் வேறுஎன்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் திமுக என்பதை மக்கள் அறிவர்.” என்றார். திமுக என்ற  ஒரு கட்சியே இருக்காது என பிரதமர் மோடி கூறிய நிலையில், கனிமொழி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தனது பெயரை பிரதமர் மேடையில் உச்சரிக்காதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, கலைஞரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். எங்களது பெயரை சொல்லக் கூட பிரதமருக்கு மனமில்லை. அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios