நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு செல்லாத நாளன்று திமுக எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று முன் தினம் அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேசமயம், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், நேற்றையை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கொண்டு வந்தார். அத்தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நேற்றைய தினம் அவைக்கே செல்லாத சேலத்தை சேர்ந்த திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்திருந்ததால் நாடாளுமன்றத்துக்கு அன்றைய தினம் தாம் செல்லவில்லை எனவும், தன்னை இடைநீக்கம் செய்தது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயல் தனக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஏற்பட்ட அவமானம் என்று கூறிய அவர், நாடாளுமன்றத்திற்கு வந்தவர்கள் யார் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. திமுக மீது வெறுப்பு கொண்டு, அவையில் இல்லாத ஒருவரை கூட சஸ்பெண்ட் செய்துள்ளனர். என்னை எதற்காக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நான் அன்று செல்லவில்லை. எனக்கு வறட்டு இருமல் இருந்தது. ஆனால், பின்னர் நான் செல்ல விரும்பினேன் அதற்குள் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. நான் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது எனக்கு மிகப்பெரிய அவமானம் மட்டுமல்லாமல் சபாநாயகர் செய்த மிகப்பெரிய தவறு.” என்றார்.
அவைக்கு செல்லாத எஸ்.ஆர்.பார்த்திபன் இடைநீக்கம் செய்யப்பட்டது ஒட்டுமொத்த நிர்வாகத்தின் கேலிக்கூத்து என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, அவர் தவறுதலாக சஸ்பெண்ட் செய்யவிட்டுவிட்டதாகவும் பின்னர் அவரது சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டதாகவும் மத்திய நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிப்பு!
முன்னதாக, மக்களாட்சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்படுது ஏன்? என கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது மக்களாட்சிக்கு எதிரானதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மலினப்படுத்துவதும் ஆகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
