திமுக இன்னும் திருந்தவே இல்ல... நாளிதழ்களில் சீன கொடியுடன் விளம்பரம்... அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ள விளம்பரத்தில் சீனா முத்திரை இருப்பதைக் காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ள விளம்பரத்தில் சீனா முத்திரை இருப்பதைக் காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் வெளியாகியுள்ள விளம்பரத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரம் இது. திமுக சீனா மீது கொண்டிருக்கும் பற்றையும், நம் நாட்டின் இறையாண்மையை முற்றிலும் புறக்கணிப்பதையும் இது வெளிப்படுத்துகிறது." என்று விமர்ச்சித்துள்ளார்.
"ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே அது குறித்து தவறான செய்திகளைப் பரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது. விரக்தியின் அளவு அவர்களின் கடந்த கால தவறுகளை மூடி மறைக்கும் முயற்சியை மட்டுமே நிரூபிக்கிறது. இன்று சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று தமிழ்நாட்டில் இல்லாமல், ஏன் ஆந்திராவில் உள்ளது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு திட்டங்களை மூடி மறைக்கும் தமிழக அரசு: தூத்துக்குடியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
"இஸ்ரோவின் முதல் ஏவுதளம் குறித்து திட்டமிட்டபோது, இஸ்ரோவின் முதல் தேர்வாக தமிழ்நாடுதான் இருந்தது. அப்போது கடுமையான தோள்பட்டை வலி காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாத அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை, தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு அனுப்பிவைத்தார்.
இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இறுதியாக மதியழகன் குடி போதையில் கூட்டத்திற்கு வந்தார். கூட்டம் முழுவதிலும் அவர் ஒத்துழைக்கவில்லை. 60 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு திமுக கொடுத்த வரவேற்பு இதுதான். திமுக இன்றுவரை பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது!" என அண்ணாமலை சாடியுள்ளார்.
தூத்துக்குடியின் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பல திட்டங்களைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்கம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஆகியற்றை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்துள்ளார். மொத்தம் ரூ.17,300 கோடி மதிப்பிலான 30க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், எல். முருகன், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.