மயிலாடுதுறையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் திமுக எம்.பி ஆ.ராசா நொடிப்பொழுதில் உயிர் தப்பினார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
DMK MP A. Raja narrowly escaped: மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு பொருத்தப்பட்டு இருந்த மின்விளக்குகள் சாய்ந்ததில் திமுக எம்.பி. ஆ.ராசா நூலிழையில் உயிர் தப்பினார். தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வருவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மயிலாடுதுறையிலும் ஓரளவு நல்ல மழை பெய்தது. நேற்று மழையுடன் சூறைக்காற்றும் பலமாக வீசியது. இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வந்தது. திமுக சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ ராசா இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திடீரென சாய்ந்த மின்கம்பம்
கூட்டத்தில் பேசிய ஆ.ராசா பட்ஜெட் குறித்து கூட்டத்தினர் மத்தியில் விரிவாக பேசிக் கொண்டிருந்தார். அந்த வேளையில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மேடையின் அருகே வைக்கப்பட்டு இருந்த மின்விளக்குகள் திடீரென ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த திசையை நோக்கி சாய்ந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா நொடிப்பொழுதில் அந்த இடத்தில் இருந்து விலகினார்.
நொடிப்பொழுதில் தப்பிய ஆ.ராசா
இதனைத் தொடர்ந்து அந்த மின் விளக்குகள் ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது. நல்லவேளையாக சுதாரித்து விலகியதல் ராசாவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற நிர்வாகிகள் சாய்ந்த மின் விளக்குகளை அங்கு இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து ஆ.ராசா அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். மேலும் அந்த பகுதியில் பலத்த மழை கொட்டியதால் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டமும் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இணையத்தில் வைரல்
திமுக எம்.பி. ஆ.ராசா பேசிக் கொண்டிருக்கும்போது மின்கம்பம் சாய்ந்து விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மின்விளக்குகள் வலுவாக அமைக்ப்படவில்லையா? இல்லை காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததா? என்பது தெரியவில்லை. திமுக எம்.பி. நூழிலையில் தப்பிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


