செந்தில் பாலாஜி இடத்தில் உதயநிதி: 2024இல் திமுக கோட்டையாகுமா கொங்கு மண்டலம்?
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக சார்பில் கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ளது. ஏற்கனவே வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை மண்டல வாரியாக நடத்தி முடித்துள்ள திமுக சார்பில், மக்களவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சு நடத்தும் குழு, கணிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் 5 பேர் கொண்ட குழு என மொத்தம் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்பதை, தேர்தல் குழு அமைப்பின் மூலம் திமுக காட்டியுள்ளது. ‘தொடங்கியது 2024 தேர்தல் பணி; பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்! இந்தியா வெல்லும்’ என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
திமுக அமைத்துள்ள குழுக்களில் இளையோர் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜா, பி.டி.ஆர். பழனிவேல் தியகராஜன், சென்னை மேயர் பிரியா, மருத்துவர் எழிலன், சி.வி.எம்.பி.எழிலரசன் என பலர் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். இக்குழுதான் அனைத்துக்கும் முதன்மையான குழு. இக்குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள இவர்களில் மண்டலத்துக்கு ஒருவர் என தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
வடக்கு மண்டலத்தில் அமைச்சர் எ.வ.வேலு, தெற்கு மண்டலத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். டெல்டா மண்டலத்தை அமைச்சர் கே.என்.நேருவும், சென்னை மண்டலத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் ஒருங்கிணைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கொங்கு மண்டலத்தில் ஒருங்கிணைக்க திமுகவின் மேற்கு மண்டல பிரதிநிதியாக உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விசாரிக்கையில், மேற்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. ஆனால், அவர் சிறையில் உள்ள காரணத்தால் கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படவுள்ளார் என்கின்றனர்.
ஆனால், கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அக்கட்சி படுவீக்காக உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் அதற்கு மற்றுமொரு உதாரணம். கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9இல் அதிமுகவும், 1இல் அதன் கூட்டணி கட்சியான பாஜகவும் வெற்றி வாகை சூடியது.
எனவே, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம், கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே எப்போதுமே திமுகவின் பிரஸ்டிஜ் பிராப்ளமாகவே இருந்து வருகிறது. திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளது. 2019 தேர்தலை போலவே எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார். அதற்காக, அவர் ஆட்சிக்கு வந்ததுமே கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த தொடங்கி விட்டார்.
அதன்படி, கோவை பொறுப்பாளராக அதிமுகவில் இருந்து வந்த செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். நம்பிக்கைக்கு உரிய ஒருவரை கோவைக்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பமாக இருந்த நிலையில், பல்வேறு தேடல்களுக்கு பிறகு அவரது சாய்ஸாக இருந்தது செந்தில் பாலாஜிதான். முன்னதாக, கனிமொழி, உதயநிதி என ஸ்டாலின் பரிசீலித்து வந்த இடத்துக்கு அதிமுகவில் இருந்து வந்த புதியவர் நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால், கொங்கை திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டுவேன் என்ற உறுதியையும் முதல்வரிடத்தில் கொடுத்து விட்டுத்தான் செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றிருந்தார். அவருக்கு ஸ்டாலினும் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே கரூரை சேர்ந்த அவருக்கு கோவையில் பெரிதாக ஒத்துழைப்பு இல்லை. இதன் காரணமாகவே கரூரில் இருந்து ஆட்களை வரவழைத்து கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய அவர், கோவை மாநகராட்சியை திமுக வசமாக்கினார்.
செந்தில் பாலாஜியின் பணிகள் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு மண்டலம் திமுகவின் கைகளுக்குள் வந்தபோதுதான், அவர் அதிமுகவில் இருந்தபோது பதிவான வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதிமுகவின் கோட்டையாக இருப்பது கொங்கு மண்டலம். அங்கு பாஜகவுக்கும் கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. இவை அனைத்தும் செந்தில் பாலாஜியின் வருகைக்கு பின்னர், குறையத் தொடங்கியதாக தெரிகிறது. எனவே, மக்களவை தேர்தலில் மேற்கு மண்டலத்தை மனதில் வைத்தே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
இந்த பின்னணியில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கொங்கு மண்டலத்தில் ஒருங்கிணைக்க திமுகவின் மேற்கு மண்டல பிரதிநிதியாக உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி இடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.