திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு திமுக எம்.பி., கனிமொழி, காலை 8.15 மணியளவில் வருகை தந்தார். பிறகு திமுக தொண்டர்களுக்கு கனிமொழி வேண்டுகோள் விடுத்தார். அதில் திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார். ஆகையால் தொண்டர்கள் இங்கே இருக்க வேண்டாம் எனவும், வீட்டிற்கு சென்று வரவும் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும் மருத்துவமனை முன் தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என மருத்துவமனை அருகே கூடிய திமுக தொண்டர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் சீரான நிலையில் தொடர்வதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.