தமிழகத்தை நாசமாக்கி தமிழர்களை திமுக வஞ்சித்து வருவதாக பாஜகவின் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், கடன் சுமை காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், வணிக தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை என்றும் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு செய்தார். இதையத்து, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக ஆட்சியில் கையெழுத்தான உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம்.” என்றார்.

Scroll to load tweet…

அதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழகத்தை நாசமாக்கி தமிழர்களை திமுக வஞ்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியில் கையெழுத்தான கச்ச தீவு ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு காரணம். திமுக ஆட்சியில் கையெழுத்தான காளையை காட்சிப்படுத்தக் கூடாது என்ற அரசு ஆணையே ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு காரணம். திமுக ஆட்சியில் மது விலக்கை ரத்து செய்து கையெழுத்தான உத்தரவே இந்தியாவிலேயே அதிக விதவைகள் தமிழகத்தில் உருவானதற்கு காரணம். திமுக ஆட்சியில் ஹைட்,ரோ கார்பன் ஆ‌ய்வு செ‌ய்ய அனுமதி கொடுத்த கையெழுத்து தான் நெடுவாசல் பிரச்சினைக்கு காரணம். திமுக ஆட்சியில் காவிரி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு புதுப்பிக்காதது தான் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு காரண‌ம். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக சொன்னது தான் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு காரணம். இப்படி நூற்றுக்கணக்கான கையெழுத்துகளால் தமிழகத்தை நாசமாக்கி தமிழர்களை வஞ்சித்த திமுகவின் பட்டியல் ஏராளம்.”என பதிவிட்டுள்ளார்.